கோயம்பேடு கொடூரம்: உல்லாசத்திற்கு வர மறுத்த இலங்கைத் தமிழ்ப் பெண் படுகொலை.. புதுச்சேரியில் 3 பேர் பிடிபட்டனர்; 17 வயது சிறுமி உயிருக்குப் போராட்டம்! நடந்தது என்ன?!

 
யாழினி யாழினி

சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டல் மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, இலங்கையைச் சேர்ந்த 18 வயது இன்ஸ்டாகிராம் பிரபல இளம் பெண் கார் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் பின்னணித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு 17 வயது சிறுமி தற்பொழுது அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். தவெக பிரமுகருக்கு சொந்தமான பார் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஏற்றிக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட காரில் திமுக கொடி இருந்துள்ளது. அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளால் பெரும்பாலான சம்பவங்கள் குற்றங்கள் அதிகரிப்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. 

காவல் துறையின் விரிவான குற்றப் புலனாய்வில், விழுப்புரம் மாவட்டம் அனிச்சாங்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கி, கூலி வேலை செய்து வரும் நகுலேஸ்வரன் – மேரி ஸ்டெல்லா தம்பதியரின் மகள் யான்சி (18). இவர் பிளஸ்-2 முடித்துக் கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்ததோடு, இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்களுடன் பிரபலமாக வலம் வந்தவர்.

யாழினி

தனது சென்னை இன்ஸ்டா தோழியான பவுசியாவின் வீட்டிற்கு வந்திருந்த யான்சி, கடந்த மே 30-ம் தேதி இரவு பவுசியா, தபிதா, தீபிகா உட்பட 6 இளம் பெண்களுடன் மூன்று ஸ்கூட்டர்களில் கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள ‘கேட்வே எப்எல்-3’ என்ற ஓட்டல் பாருக்குச் சென்று மது அருந்தியுள்ளனர்.  அதே பாரில் குடித்துக் கொண்டிருந்த அரும்பாக்கத்தைச் சேர்ந்த பாலகுரு (21), சூளைமேடு ஜோஷ்வா (19), நெற்குன்றம் கிஷோர் குமார் (19), சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேர் கொண்ட போதை கும்பல், யான்சி மற்றும் அவரது தோழிகளைத் தங்களுடன் அன்றைய இரவு உல்லாசமாக இருக்க வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். சில பெண்கள் சம்மதித்த நிலையில், அதற்கு உடன்படாத யான்சி, வம்பு செய்த வாலிபர்களைச் செருப்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது.

பாருக்குள் ஏற்பட்ட கைகலப்பைத் தொடர்ந்து பவுன்சர்கள் அனைவரையும் வெளியேற்றினர். வெளியே வந்தும் வாலிபர்கள் வற்புறுத்தியதால் தகராறு முற்றியது. இதையடுத்து, பெண்கள் தங்களது ஸ்கூட்டர்களில் திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரியை நோக்கிப் புறப்பட்டனர். ஆத்திரமடைந்த பாலகுரு தரப்பினர் தங்களது காரில் பெண்களை அதிவேகமாகத் துரத்தினர்.

யாழினி

கோயம்பேடு – திருமங்கலம் சாலையில் சென்ற போது, தங்களைத் துரத்திய கார் மீது பெண்கள் கற்களை வீசியுள்ளனர். இதனால் போதையின் உச்சத்தில் இருந்த வாலிபர்கள், யான்சி மற்றும் 17 வயது தீபிகா சென்ற ஸ்கூட்டர் மீது காரை மோதி இருவரையும் தூக்கி வீசினர். மேலும், காயங்களுடன் விழுந்து கிடந்த யான்சி மீது மீண்டும் காரை ஏற்றிக் கொடூரமாகக் கொன்றுவிட்டுத் தப்பினர்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு கார், பதிவு எண்க கழற்றப்பட்ட நிலையில் கோயம்பேடு பூண்டு மார்க்கெட் பகுதியில் இருந்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றவாளிகள் தப்பியோடிய பாதைகளின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த கோயம்பேடு போலீசார், அவர்கள் புதுச்சேரிக்குத் தப்பிச் சென்றதை அறிந்தனர். உடனே புதுச்சேரி மாநில போலீசார் உதவியுடன் பாலகுரு (21), ஜோஷ்வா (19), கிஷோர் குமார் (19) ஆகிய 3 பேரை அதிரடியாகக் கைது செய்தனர். இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான சுமன் சக்திவேல், மோகனசுந்தரம், ராகுல், விமல் ஆகிய மற்ற 4 பேரைத் தேடக் கோயம்பேடு துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய தீபிகா (17) தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடி வருகிறார். மருத்துவமனைக்கு வந்த யான்சியின் தாய் மேரி ஸ்டெல்லா, "கல்லூரி செல்லக் காத்திருந்த என் மகள் நடிகை போல் அழகாக ரீல்ஸ் போடுவாளே, அவளை இப்படிப் படுகொலை செய்து விட்டார்களே" எனத் தனது மகளின் உடலைப் பார்த்துக் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்தக் கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையினர் இணைந்து அந்த மதுபானக் கூடத்திற்கு அதிரடியாகச் சீல் வைத்துள்ளனர்: விபத்தில் சிக்கிய தீபிகாவுக்கு 17 வயது மட்டுமே ஆகும் நிலையில், சட்ட விரோதமாகச் சிறுமிகளைப் பாருக்குள் அனுமதித்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த ஓட்டல், பிரபல டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் தவெக நிர்வாகியான பாலாஜி என்பவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது. டாஸ்மாக் விதிப்படி நள்ளிரவு 12 மணி வரை மட்டுமே பார்களுக்கு அனுமதி உள்ள நிலையில், தனது அரசியல் மற்றும் பண பலத்தைப் பயன்படுத்தி வார இறுதி நாட்களில் அதிகாலை 3 மணி வரை சட்ட விரோதமாக பாரை இயக்கியதாக ஓட்டல் உரிமையாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்தும் உரிமையாளரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.