கிருஷ்ண ஜெயந்தி 2026: கோகுலாஷ்டமி வழிபாட்டு முறைகளும் சிறப்புகளும்!
ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரமும் அஷ்டமி திதியும் இணைந்து வரும் நன்னாளில் அவதரித்த ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்தநாள் கோகுலாஷ்டமியாகக் கொண்டாடப்படுகிறது. இந்தச் சிறப்புமிக்க நாளில் கிருஷ்ணரை எவ்வாறு வழிபட வேண்டும் மற்றும் செய்ய வேண்டிய முறைகள் குறித்து ஆன்மீகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வீட்டின் வாசலில் அழகிய கோலமிட்டு, அதில் கண்ணனின் சின்னச் சின்ன பாதங்களை வீட்டுக்குள் வருவது போல் வரைய வேண்டும். இது கிருஷ்ணரை நமது வீட்டிற்குள் வரவேற்பதைக் குறிக்கிறது.

கிருஷ்ணரின் படம் அல்லது விக்கிரகத்திற்குச் சந்தனம், குங்குமம் இட்டுப் பூ சூட்ட வேண்டும். மேலும், துளசி இலைகள், பூக்கள், பழங்கள், அவல், வெண்ணெய் மற்றும் இனிப்புப் பண்டங்களை வைத்து வழிபட வேண்டும்.
மற்ற விரதப் பண்டிகைகளைப் போலன்றி, கிருஷ்ண ஜெயந்திக்கு விதவிதமான பலகாரங்கள் செய்து படைக்க வேண்டும். குறிப்பாக, கண்ணனுக்கு மிகவும் பிடித்தமான வெண்ணெய் நைவேத்தியத்தில் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

ஜென்மாஷ்டமி நாளில் காலையில் இருந்து நள்ளிரவு வரை விரதம் இருக்க வேண்டும். விரதம் தொடங்கிய நிமிடம் முதல் கிருஷ்ணரின் திருநாமங்களைச் ஜெபித்து, கோயில்களுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு.
முதலில் மூல முதற்கடவுளான விநாயகரை வணங்கிவிட்டுப் பூஜையைத் தொடங்க வேண்டும். விளக்கேற்றி, கிருஷ்ணரின் நாமத்தைச் சொல்லி ஒவ்வொரு மலராக அர்ப்பணித்து பூஜை செய்ய வேண்டும். குழந்தை இல்லாதவர்கள் ஆலிலை கிருஷ்ணனின் படத்தை வைத்து வழிபடுவது கூடுதல் சிறப்புடையது.
