பயங்கரம்... இரு இளைஞர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை!
கிருஷ்ணகிரி மாவட்டம் பூவத்தி பகுதியில், சாலையோரம் இரு இளைஞர்கள் கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரை கிலோமீட்டர் இடைவெளியில் கண்டெடுக்கப்பட்ட இரு சடலங்களுமே பெட்ஷீட் சுற்றப்பட்டு, பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. ஒரே பாணியில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த இரட்டைக் கொலைச் சம்பவம், திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிதைந்த நிலையில் இருந்த இரு உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் யார், அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை. கொலையாளிகள் தடயங்களை மறைப்பதற்காக உடல்களை எரிக்க பெட்ரோலைப் பயன்படுத்தியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்யும் போலீசார், சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் குறித்துத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது விசாரணை முடிவிலேயே தெரியவரும்.
