தகைசால் தமிழர் விருது கிருஷ்ணசாமிக்கு அறிவிப்பு.. நவ்ஷீன் பானு சந்திற்கு கல்பனா சாவ்லா விருது!

 
விஜய் மகிழ்ச்சி

தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் சிறந்த தொண்டாற்றிய அமைப்புகள் மற்றும் ஆளுமைகளைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் உயரிய 'தகைசால் தமிழர் விருது' இந்த ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் மூத்த தலைவருமான எம். கிருஷ்ணசாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது. விருது பெறும் எம். கிருஷ்ணசாமிக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது.

வந்தவாசி மற்றும் ஆரணி தொகுதிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் (2006-2008) பணியாற்றியவர். பல தசாப்தங்களாகத் தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கும் சமூக நீதி வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

துணிச்சலான மற்றும் வீரசாகசச் செயல்களில் ஈடுபட்ட பெண்களுக்காக வழங்கப்படும் 'கல்பனா சாவ்லா விருது', இந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த நவ்ஷீன் பானு சந்த் என்பவருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது.