கூடங்குளம் அணு உலையில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு - மின் உற்பத்தி தற்காலிக நிறுத்தம்!

 
கூடங்குளம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அங்கு நடைபெற்று வந்த 1,000 மெகாவாட் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கான மின் பகிர்வில் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணு உலைகள் மூலம் தினசரி ஒட்டுமொத்தமாக 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின் தொகுப்பிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. இன்று காலை கூடங்குளம் முதலாவது அணு உலையின் 'ஜெனரேட்டர் பாதுகாப்பு அமைப்பில்' எதிர்பாராதவிதமாகத் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

கூடங்குளம் அணுஉலை

அணு உலை பாதுகாப்பு விதிமுறைகளின்படி, ஜெனரேட்டர் அமைப்பில் கோளாறு கண்டறியப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே முதலாவது அணு உலையின் இயக்கம் மற்றும் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி தற்காலிகமாகத் தானியங்கி முறையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இரண்டாவது அணு உலை வழக்கம் போல் எவ்விதப் பாதிப்புமின்றித் தொடர்ந்து இயங்கி வருகிறது.

கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும்பகுதி தென் மாநிலங்களுக்குப் பிரித்து வழங்கப்படுகிறது. முதலாவது அணு உலையின் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி முடங்கியுள்ளதால், இதிலிருந்து தமிழகத்திற்கு தினசரி கிடைக்க வேண்டிய 562 மெகாவாட் மின் பகிர்வில் தற்பொழுது தற்காலிகச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோடைகால மின்தேவையைச் சமாளிப்பதில் மின்வாரியத்திற்கு லேசான கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம்

அணுமின் நிலைய வளாகத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பப் பழுதை விரைந்து சரிசெய்வதற்கான பணிகளில் இந்திய அணுசக்தி கழக விஞ்ஞானிகள் மற்றும் உயர் தொழில்நுட்பப் பொறியாளர்கள் குழுவினர் தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஜெனரேட்டர் பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் முழுமையாக ஆராயப்பட்டு, இன்னும் ஓரிரு நாட்களுக்குள் முதலாவது அணு உலை மீண்டும் இயக்கப்பட்டு, மின் உற்பத்தி முழுத் திறனுடன் முறைப்படி தொடங்கும் என அணுமின் நிலைய அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.