குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா... பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்!
தமிழகத்தில் தூத்துக்குடி, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று குலசையில் குவிந்தனர். அதன்பின்னர் கடலில் புனித நீராடி மாலை அணிந்து சாமி தரிசனம் செய்து தங்களது விரத்தைத் துவங்கினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற அக்டோபர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 12ம் தேதி இரவு விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. இத்திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்கள் 41 நாள், 31 நாள், 21 நாள் என தங்கள் வசதிக்கேற்ப மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர். இதில் பெரும்பாலான பக்தர்கள் 21 நாட்கள் விரதம் இருப்பார்கள்.
இந்த வகையில் நேற்று முதல் வருகிற அக்டோபர் 12ம் தேதி வரை 21 நாட்கள் வருவதால், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார்கள், வேன்கள், பஸ்கள் மூலம் குலசேகரன்பட்டினத்தில் குவிந்தனர். இதனால் குலசேகரன்பட்டினத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் தலையாக காட்சியளித்தது.
மேலும், தசரா திருவிழாவையொட்டி பாசி மாலை விற்பனை செய்ய நெல்லை, வள்ளியூர், பேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான நரிக்குறவர்கள் குடும்பத்துடன் தங்கி, கடைகள் அமைத்து உள்ளனர். இந்த கடைகளில் ரூ.30 முதல் ரூ.350 வரை பல்வேறு விதமான மாடல்களில் பாசிகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பிருந்து கடற்கரை வரை ஏராளமான பாசி மாலை விற்பனை செய்யும் நரிக்குறவர்கள் தங்களது குடும்பத்துடன் குவிந்து காணப்படுகின்றனர்.
விழாவில் பக்தர்கள் காளி, கருப்பசாமி, போலீஸ், திருடன், பல்வேறு அம்மன் வேடம், சிவன், பார்வதி, கரடி, குரங்கு, சுடலை, அனுமார் உள்ளிட்ட பல்வேறுவிதமான வேடங்கள் அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். காளி வேடம் அணியும் பக்தர்கள் கிரீடம், சூலாயுதம், சடை முடி போன்ற பொருட்களை 21 நாளும் பூஜையில் வைத்து வழிபட வேண்டும். பின்னர் இந்த வேடத்தை பயபக்தியுடன் மிகவும் கட்டுப்பாட்டுடன் அணிந்து கிராமம், கிராமமாக சென்று நேர்த்திக்கடன் வசூல் செய்வர்.
இந்த வேட பொருட்கள் உள்ளிட்ட தசரா பொருட்கள் உடன்குடி பஜாரிலுள்ள சில கடைகளில் பிரத்யேகமாக வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடைகளில் ஏராளமான தசரா வேடம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. கோவிலில் மாலை அணிந்த பக்தர்கள் இந்த கடைகளில் குவிந்து தசரா பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் உடன்குடி பஜார் வீதிகளில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!