சொகுசு காரில் ரூ.3 லட்சம் குட்கா கடத்தல்... தட்டித் தூக்கிய காவல்துறை!

 
குட்கா குட்கா

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கரகதஅள்ளி சுங்கச்சாவடியில் போலீசார் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓசூரிலிருந்து தர்மபுரி நோக்கி அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த காரின் உட்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 மூட்டைகளில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 81 கிலோ குட்கா பொருட்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் 3 லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். பெங்களூரிலிருந்து சேலம் நோக்கி இந்த போதை பொருட்களைக் கடத்தி வந்ததாக விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட 28 வயது அசோக்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய பின்னர் அவரை தர்மபுரி சிறையில் அடைத்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக எல்லையோரப் பகுதிகளில் போதை பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.