பசிபிக் கடலில் எல் நினோ தொடக்கம்... உலக நாடுகளுக்குப் புதிய அச்சுறுத்தல்!

 
எல் நினோ எல் நினோ

உலக வெப்பமயமாதல் காரணமாக உலகளாவிய வானிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எல் நினோ காலநிலை மாற்றம் தற்பொழுது பசிபிக் பெருங்கடலில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. பசிபிக் கடலின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை வழக்கத்தை விட மோசமான அளவான 0.5 சென்டிகிரேட்டைத் தொட்டதால் இந்த நிலை உருவானதாக ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மே மாத இறுதியில் இந்த வெப்பநிலையானது 0.67 சென்டிகிரேட் வரை உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையமும் கவலை தெரிவித்து இருக்கிறது.

இந்த எல் நினோ விளைவினால் உலகளாவிய சராசரி வெப்பநிலை வழக்கத்தை விட மிக அதிகமாக உயர்ந்து பல நாடுகளில் கோடைகாலம் கொடூரமான முகத்தைக் காட்டக் கூடும். குறிப்பாக ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா போன்ற பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்படுவதோடு மழை பொய்த்துப் போய் பயங்கரமான காட்டுத்தீ பரவும் அபாயமும் உள்ளது. அதே நேரத்தில் வழக்கமாக வறண்டு காணப்படும் தென் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் கணிக்க முடியாத அளவுக்குப் பெருமழை கொட்டி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

இது தவிர கடல் நீர் அதிக வெப்பமடைவதால் கடலில் உள்ள பவளப்பாறைகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், மீன்கள் குளிர்ந்த நீரைத் தேடி வேறு இடங்களுக்கு இடம்பெயரத் தொடங்கும். இதனால் கடல்சார் உணவு உற்பத்தி குறைந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகும். ஒட்டுமொத்தத்தில் இந்த எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் தோன்றும் ஒரு தற்காலிக காலநிலை மாற்றம் மட்டுமல்லாமல், உலக வெப்பமயமாதலால் பூமி நமக்குக் கொடுக்கும் இறுதி எச்சரிக்கையாகும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.