லெபனானில் இஸ்ரேல் நடத்திய பயங்கர வான்வழித் தாக்குதல்... பெண் பத்திரிகையாளர் உட்பட 5 பேர் பரிதாப பலி!

 
லெபனான் லெபனான்

 

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று ஏப்ரல் 23 மீண்டும் ஒரு கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. தெற்கு லெபனானில் உள்ள அட்-திரி கிராமத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒரு பெண் பத்திரிகையாளர் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் எல்லையில் பதற்றம் குறையாமல் தொடர்ந்து குண்டு மழைகள் பொழிந்து வருவது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான வாகனத்தில் பயணம் செய்த 2 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியானதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதே பகுதியில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பில் மேலும் 2 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் படுகாயமடைந்த பெண் பத்திரிகையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்திற்கு லெபனான் தகவல் தொடர்புத்துறை மந்திரி பால் மார்கோஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே தற்காலிகமாக 10 நாட்கள் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே உறுதிப்படுத்தி இருந்தார். இத்தகைய சூழலில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எல்லையில் அமைதி திரும்புவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டாலும் அப்பாவி பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்கள் உயிரிழப்பது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.