கோயிலில் பயங்கரம்... கூலித் தொழிலாளி பாறாங்கல்லால் அடித்துக் கொலை!
சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் உள்ள ஒரு கோயிலில் தூங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி, பாறாங்கல்லால் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் ஒண்டிக்குப்பத்தைச் சேர்ந்த சீனிவாசன் (35) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவர். இந்தச் சம்பவம் தொடர்பாக மல்லிகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (20) என்ற வாலிபரைப் பொதுமக்கள் பிடித்துப் போலீசில் ஒப்படைத்தனர்.
சம்பவத்தன்று மாலை, மதுபோதையில் இருந்த ஆகாஷ், சீனிவாசன் மற்றும் அவரது நண்பரிடம் அரை நிர்வாணமாக நின்று வம்பு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், ஆகாஷை அடித்து விரட்டியுள்ளார். இந்த முன்விரோதத்தை மனதில் வைத்திருந்த ஆகாஷ், இரவு 11 மணி அளவில் சீனிவாசன் கடற்கரை கோயிலில் மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளார். இதில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனைப் பார்த்த அந்த வழியாகச் சென்ற ஒருவர் சத்தம் போடவே, தப்பியோட முயன்ற ஆகாஷைப் பொதுமக்கள் விரட்டிப் பிடித்துத் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர் திருவொற்றியூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். உயிரிழந்த சீனிவாசனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயம் அடைந்த ஆகாஷும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
