லடாக் எல்லையில் உயிர்விட்ட திருவண்ணாமலை அக்னி வீரர் நந்தா... 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் !
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கல்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயதான அக்னி வீரர் நந்தா. இவர் லடாக்கில் உள்ள இந்திய-சீன எல்லையில் நாட்டின் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தபோது அங்கு கடும் பனிப்பொழிவு நிலவியுள்ளது. அந்தச் சூழலில் ஏற்பட்ட கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாட்டின் எல்லைப் பகுதியில் விழிப்புடன் பணியாற்றிய இளம் வீரரின் அகால மரணம் அவரது குடும்பத்தினரையும் ஒட்டுமொத்த ஊம்காரர்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடல் நேற்று சிறப்பு விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து சொந்த ஊரான கல்வாசல் கிராமத்திற்கு ராணுவ வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலைக் கண்டு கதறி அழுத பொதுமக்களும் உறவினர்களும் நாட்டிற்காக உயிர்நீத்த அந்த வீரருக்குத் தங்களது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் நந்தாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. நாட்டின் பாதுகாப்புக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த இளம் வீரரின் இறுதிச் சடங்கில் பல உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
