பெண்களே உஷார்... வழிகேட்பது போல் நடித்து பெண்ணிடம் 9 சவரன் செயின் பறிப்பு!
காரைக்கால் மாவட்டம், ஜீவானந்தம் வீதியைச் சேர்ந்த சரண்யா என்ற பெண், நெடுங்காடு பண்டாரவடை ஏரிக்கரை அருகில் தங்களுக்குச் சொந்தமான பருத்தி வயலைப் பார்வையிடுவதற்காக மாலை நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்தச் சமயத்தில், அவரைத் திட்டமிட்டுப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், திடீரென சரண்யாவை வழிமறித்து நிறுத்தி கும்பகோணத்திற்குச் செல்வதற்கான வழியைக் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் தனக்கு வழி தெரியாது எனக் கூறியதை அடுத்து, அந்த மர்ம நபர்கள் தங்களது உண்மையான கொடூரக் முகத்தைக் காட்டியுள்ளனர்.

திடீரென இரண்டு நபர்களில் ஒருவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டிச் சரண்யாவை மிரட்டி, அவரது கழுத்தில் இருந்த 9 சவரன் தங்கச் சங்கிலியையும், இருசக்கர வாகனத்தின் சாவியையும் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சரண்யா, உடனடியாகத் தனது செல்போன் மூலமாகத் தந்தை சிவக்குமாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தந்தையின் உதவியோடு நெடுங்காடு காவல் நிலையத்திற்குச் சென்று, முறைப்படி புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்துச் சென்ற 2 மர்ம நபர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் பெண்ணைக் கத்தியைக் காட்டி மிரட்டி நகையைப் பறித்துச் சென்ற துணிகரச் சம்பவம் காரைக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை மிக விரைவாகக் கண்டுபிடிப்பதற்காக அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளைப் பாதுகாப்புப் படைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
