பல லட்சம் கோடி இழப்பீடு... கதறும் முதலீட்டாளர்கள்.. இந்திய பங்குச்சந்தை கடும் சரிவு!
இன்று இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகத்தின் முடிவில் கடும் சரிவைச் சந்தித்து எதிர்மறையான நிலைக்குத் தள்ளப்பட்டன. சர்வதேச சந்தை நிலவரங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளின் விலகல் போன்ற காரணங்களால் முக்கியக் குறியீடுகள் சரிவை எதிர்கொண்டன.

இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் சற்று எழுச்சியுடன் காணப்பட்டாலும், நாளின் முடிவில் சுமார் 778 புள்ளிகள் வரை சரிந்து கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. கடந்த ஐந்த மாதங்களில் இல்லாத அளவிற்கு நிஃப்டி குறியீடு சரிவைச் சந்தித்து, பல முக்கிய நகர்வுகளை இழந்து பின் தங்கியுள்ளது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் அமெரிக்க டாலர் மற்றும் பத்திரங்களின் வட்டி விகித உயர்வு காரணமாக இந்தியப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்குக் குறிப்பிடத்தக்க அளவில் சொத்து மதிப்பு மற்றும் முதலீட்டு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற சந்தையின் முன்னணி நிறுவனப் பங்குகளின் விலைகளில் ஏற்பட்ட சரிவு ஒட்டுமொத்த குறியீடுகளையும் பெரிதும் பாதித்துள்ளது. இதன் காரணமாகப் பங்குச்சந்தையின் ஒட்டுமொத்த மூலதன மதிப்பீட்டில் பல லட்சம் கோடி ரூபாய் வரை முதலீட்டாளர்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகச் சந்தை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
