லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்.. விண்ணைப் பிளக்கும் ‘அரோகரா’ கோஷம்... திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்!

 
சூரசம்ஹாரம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும் கந்தசஷ்டித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை கடற்கரையில் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்நிகழ்வைக் காண தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளதால், நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

கடந்த நவம்பர் 10-ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய கந்தசஷ்டித் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி - தெய்வானையுடன் தங்க ரதத்தில் கிரிப்பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவை முன்னிட்டுத் திருச்செந்தூர் கோயிலின் திருவேங்கடநாதப் பெருமன்றம், வெளிப்பிரகாரங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கூடாரங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கித் தீவிர விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்செந்தூர் தூத்துக்குடி சூரசம்ஹாரம்

கோவில் வளாகம் முழுவதும் பக்திப் பாடல்கள் ஒலிப்பதும், முருகப்பெருமானின் பல்வேறு வேடங்களை அணிந்து பக்தர்கள் வழிபடுவதாலும் ஆன்மிகச் சூழல் களைகட்டியுள்ளது. கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகளாலும் மலர்களாலும் கண்கவர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. விழாவின் மிக முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்திற்காகக் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காலை 9:00 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 1:00 மணிக்குச் சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகின்றன.

முத்தாரம்மன் சூரசம்ஹாரம் குலசை

மாலை 4 மணிக்குச் சுவாமி ஜெயந்திநாதர் ஜெயந்தி மேடையில் இருந்து சூரசம்ஹாரத்திற்குப் புறப்பட்டுச் செல்கிறார். தொடர்ந்து திருச்செந்தூர் கடற்கரையில் சூரபத்மனை முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுகிறது. சூரசம்ஹாரத்தைத் தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி - அம்பாளுக்கு அலங்காரமும் தீபாராதனையும் நடைபெறும். சஷ்டி விழாவின் நிறைவாக, 7-ஆம் திருநாளான நாளை (திங்கட்கிழமை) இரவு 11:00 மணிக்குச் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானை அம்பாளுக்கும் பிரம்மாண்டமான முறையில் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த மாவட்டக் காவல் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் சுமார் 4,100 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடற்கரையில் தடுப்புக் கம்புகளும், உயர் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் கடலில் ஆழமான பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்க மிதவைத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கடலோரப் பாதுகாப்புப் படையும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது. கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் அருணாசலம் மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.