ஐஸ்வர்யத்தை அள்ளித் தரும் லட்சுமி குபேரபூஜை... எப்படி வழிபட்டால் முழு பலன் - விரத முறைகள்!
இந்தியா முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாகவே கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கியிருக்கிறது. தென்னிந்தியாவைக் காட்டிலும் வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையை மிகுந்த விசேஷமாக கொண்டாடுவார்கள். தீபாவளி அன்று இரவு அல்லது தீபாவளிக்கு முதல் நாளான இன்று இரவு குபேரனை தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து வழிபடுவர்.

இந்த பூஜையை வீட்டில் செய்திட பூஜை மாடத்தில் லட்சுமி குபேர படத்தினை வைத்து இருபக்கமும் குத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.
இதற்கு முன்பாக வாழை இலை விரித்து அதில் நவதானியங்களை பரப்பி வைக்க வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் கலசம் வைக்க வேண்டும். அதில் ஓர் மட்டை தேங்காய் வைத்திட வேண்டும்.
இந்த கலசத்தை மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரித்திட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும். விநாயகரை வணங்கி குலதெய்வத்தை மனதார பிரார்த்திக்க வேண்டும். பின் மகாலட்சுமியை வணங்கி போற்றி வழிபாடு சொல்ல வேண்டும். குபேர மந்திரங்களை சொல்ல வேண்டும். அல்லது “குபேராய நமஹ” “தனபதியே நமஹ” என 108 முறை சொல்லி தாமரை இதழ்களால் அர்ச்சிக்க வேண்டும்.

இனிப்புகள் மற்றும் பால் பாயாசம் நைவேத்தியமாக வைத்து பூஜையை முடிக்கலாம். பூஜையில் வைக்கப்படும் தட்சணை காசுகளை நமது பெட்டகங்களில் வைத்துக் கொள்ளலாம். இந்த பூஜையை செய்திட வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள். குபேரன் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்குவார் என்பது ஐதிகம்.
