நிச்சயதார்த்த விழாவில் நேர்ந்த விபத்து… ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளருக்கு அறுவை சிகிச்சை!

 
மோரிஸ்

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் லான்ஸ் மோரிஸ், தனது நிச்சயதார்த்த விழாவில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் காயமடைந்து அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இதனால் அவர் மீண்டும் சில வாரங்கள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.

28 வயதான லான்ஸ் மோரிஸ், கடந்த சனிக்கிழமை தனது பெற்றோரின் வீட்டில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி கண்ணாடி மீது விழுந்ததில் அவரது இடது கையில் ஆழமான காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உயர் செயல்திறன் பிரிவு நிர்வாகி கேட் ஹார்வி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அடுத்த வாரம் முதல் மோரிஸ் பந்துவீச்சுப் பயிற்சியைத் தொடங்குவார் என்றும், சுமார் நான்கு வாரங்களில் போட்டிகளில் விளையாடும் அளவுக்குத் தயாராக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலது கை வேகப்பந்து வீச்சாளரான மோரிஸ், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்து சுமார் 20 மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஒருநாள் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் களத்திற்குத் திரும்பியிருந்தார்.

இந்நிலையில், இந்த விபத்து அவருக்கு மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.