கேரளாவில் மீண்டும் நிலச்சரிவு.. சென்னை பெண் உட்பட 3 பேர் பலியான துயரம்!

 
கேரளா நிலச்சரிவு

கேரள மாநிலம் இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கிச் சென்னை பெண் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கேரளத்தில் தொடர் மழையின் காரணமாகத் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் செப்டம்பர் 24ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிக்கிம் சுரங்கப்பாதை ஆம்புலன்ஸ் விபத்து நிலச்சரிவு

இடுக்கி மாவட்டம் வட்டவடை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதியில் நேற்று மதியம் லேசான நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது தொழிலாளர்கள் தங்கியிருந்த வீடு இடிந்து விழுந்த விபத்தில், கொட்டகம்பூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (51), அவரது சகோதரி சின்னு (45) ஆகியோர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய மாரியம்மா என்பவர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோட்டயம் அருகே உள்ள டீக்காய் வேலத்துச்சேரியில் நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சுற்றுலாத்தலமான வாசகமணு சென்று விட்டு ஸ்கூட்டரில் திரும்பிச் கொண்டிருந்த பெண்கள் சிக்கினர். மண் சரிந்து விழுந்ததில் விபத்துக்குள்ளானதில் சென்னை ஜவகர் நகரைச் சேர்ந்த சங்கீதா அருள் லால் (35) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த மற்றொரு தோழி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரளா நிலச்சரிவு

கள்ளக்கடல் நிகழ்வின் ஒரு பகுதியாக இன்று கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களின் கடற்கரைப் பகுதிகளில் 1.5 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழும்பக்கூடும் எனவும், கடல் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.