நீலகிரியில் நிலச்சரிவு.. கனமழை... ஊட்டி மலை ரயில் சேவை ரத்து - மேட்டுபாளையம் சாலை மூடப்பட்டது!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பலத்த காற்றுடன் கூடிய அதீத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்தத் தொடர் மழையின் காரணமாகப் பிரசித்தி பெற்ற உலக பாரம்பரியச் சின்னமான நீலகிரி மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையேயான மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இயற்கை சீற்றத்தால் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி நீலகிரி மாவட்டம் ஊட்டி வரை இயக்கப்படும் பாரம்பரிய நீலகிரி மலை ரயில், உலக அளவில் புகழ்பெற்ற ஒன்றாகும். இதன் பழமை மற்றும் சிறப்பைக் கருத்தில் கொண்டு, கடந்த 2005-ஆம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை உலக பாரம்பரியச் சின்னமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த மலைப்பாதையில் வளைந்து நெளிந்து செல்லும் ரயிலில் பயணம் செய்துகொண்டே, மலைப்பகுதிகளின் பனிமூட்டம் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளைக் கண்டு ரசிக்கத் தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மேட்டுப்பாளையத்திற்கு வருகை தருவது வழக்கம்.
தற்போது இப்பகுதிகளில் பெய்துவரும் பலத்த கனமழையின் காரணமாக, மேட்டுப்பாளையம் மற்றும் உதகைக்கு இடைப்பட்ட மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. தண்டவாளங்களில் மண்சரிந்து விழுந்திருப்பதாலும், பாறைகள் உருண்டு கிடப்பதாலும் ரயில் பாதைகள் சேதமடைந்துள்ளன. பயணிகள் பாதுகாப்பிற்கு எத்தகைய ஆபத்தும் நேராதவாறு இருக்க வேண்டும் என்பதற்காக மலை ரயில் சேவை உடனடியாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ரயில்வே துறை பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் பல குழுக்களாகப் பிரிந்து மலை ரயில் பாதையைச் சீரமைக்கும் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர். தண்டவாளங்களின் மீது விழுந்துள்ள மண் மற்றும் மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், வானிலை சீரானதும் ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில் சேவையைப் போலவே சாலைப் போக்குவரத்தும் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் 3 இடங்களிலும், மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் 14 வெவ்வேறு இடங்களிலும் பெரிய அளவிலான மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக இவ்விரு முக்கிய மலைச் சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு ஸ்தம்பித்துள்ளது.
சாலையில் சரிந்து கிடக்கும் மண் மற்றும் ராட்சதப் பாறைகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் அவ்வப்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. பருவமழை முழுமையாக ஓயும் வரை சுற்றுலாப் பயணிகள் யாரும் நீலகிரி மலைப் பகுதிக்குச் சுற்றுலா வருவதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் தரப்பில் தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.
