கொடைக்கானலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு: அடுக்கம் சாலை தனி தீவானது.. கிராம மக்கள் தவிப்பு!
திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாகக் கொடைக்கானல் செல்லும் மலைச் பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து கடுமையான மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தச் சாலை முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், அடுக்கம் கிராம மக்கள் வெளியுலகத் தொடர்பின்றித் தவித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழலில், மலைப் பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக, பெரியகுளம் - அடுக்கம் - கொடைக்கானல் வழித்தடத்தில் உள்ள மலைச் சரிவுகளில் மண் சரிந்து விழுந்ததோடு, பெரிய பெரிய பாறைகளும் மரங்களும் வீழ்ந்து சாலையை முற்றிலும் அடைத்துள்ளன. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளதால், அப்பாதை வழியாக வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வெளியே வர முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்துத் தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாறைகள் மற்றும் மண் சரிவுகளை அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கனரக இயந்திரங்களைக் கொண்டு போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது வரை சுமார் 50 சதவீதப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாகப் பணிகளை விரைந்து முடிப்பதில் சவால்கள் நீடிக்கின்றன. மீதமுள்ள பணிகளையும் விரைவாக முடித்து, போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குச் சாலையை மீண்டும் கொண்டு வர அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
