"சிரிப்பு சிரிப்பா வருது... CBI வழக்கு இருப்பதால் பதற்றமா?" - அன்புமணிக்கு பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்ட மாணிக்கம் தாகூர்!

 
தாகூர் அன்புமணி

மாமல்லபுரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் தங்களைக் கடுமையாக விமர்சித்த அன்புமணி ராமதாஸுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான மாணிக்கம் தாகூர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்ற பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் மீண்டும் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். இக் கூட்டத்தில் பேசிய அவர்,  "மேகதாது விவகாரத்தில் காங்கிரஸும் பா.ஜ.க-வும் இணைந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வரவிடாமல் சதி செய்து வருகின்றன. அடிக்கல் நாட்டினால் தேர்தலில் வென்றுவிடலாம் என நினைக்கிறார்கள்".

"அமைதியாக ஆக்கப்பூர்வமான அரசியலை நாங்கள் செய்து வருகிறோம். பா.ம.க தனித்து நின்று எத்தனையோ சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. ஆனால், காங்கிரஸால் தனித்து நின்று ஒரு கவுன்சிலர் பதவியைக் கூட வெல்ல முடியாது" என விமர்சித்தார்.

அன்புமணியின் பேச்சுக்குக் பதிலளிக்கும் விதமாகத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மாணிக்கம் தாகூர் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்: "அன்புமணியின் பேச்சைக் கேட்டேன், மிகவும் சிரிப்பாக இருந்தது. மேகதாதுவில் அணை கட்டுவதற்குத் தமிழ்நாட்டிடம் அனுமதி பெறத் தேவையில்லை என மத்திய இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளார். இதை எதிர்த்து நீங்கள் பாஜக-வுக்கு வழங்கி வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவீர்களா? இதற்கு ஏன் இவ்வளவு பதற்றப்படுகிறீர்கள்? உங்கள் மீது சிபிஐ வழக்கு இருக்கிறது என்பதால் பதற்றப்படுகிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அன்புமணி

"அதிமுக மற்றும் பாஜக தயவிலேயே 4 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று நீங்கள் அரசியல் செய்து வருகிறீர்கள். அதிமுக புண்ணியத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரையும் பெற்றுள்ளீர்கள். இந்திய அளவில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸைப் பற்றி நீங்கள் எப்படிப் பேச முடியும்?" எனத் தாக்குதல் நடத்தியுள்ளார்.

மேகதாது விவகாரத்தில் பாஜக அரசு தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் வகையிலான பதிலை அளித்திருப்பதைக் கண்டித்து, மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவைப் பா.ம.க விலக்கிக் கொள்ளுமா எனத் தனது வீடியோவில் மாணிக்கம் தாகூர் நேரடியாகச் சவால் விடுத்துள்ளார்.