‘சட்டம் ஒழுங்கு சரியில்ல...’ இன்று காலை ஆளுநரை சந்தித்து புகாரளிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்!

 
உதயநிதிவிஜய்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாக, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு நேரில் சந்தித்துப் புகார் மனு அளிக்க உள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ.  அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பிப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நேற்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வாலை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் மனு அளித்திருந்தார்.

உதயநிதி

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்; வழக்கின் சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் மின்னணு ஆதாரங்களைப் பாதுகாத்து விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும், கடந்த நவம்பர் 8-ஆம் தேதி துறையூர் த.வெ.க. எம்.எல்.ஏ.-வும் சட்டப்பேரவை துணைத் தலைவருமான எம். ரவிசங்கர் மனுதாரரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்திலும் வழக்குப் பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி கடந்த ஜூலை 31-ஆம் தேதியே தலைமைச் செயலாளர் எம். சாய் குமாரிடம் புகார் அளித்தும், 116 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். “பாதிக்கப்பட்ட அதிகாரி புகார் அளித்தபோது, நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக வேறு மாவட்டத்திற்கு மாறுதல் பெற்றுச் செல்லுமாறு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். புகாரை 116 நாட்களாக மூடிமறைக்க முயன்ற தலைமைச் செயலாளர் எம். சாய் குமாரையும் இந்த வழக்கில் ஒரு குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

உதயநிதி

நீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகே தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பியுள்ள உதயநிதி ஸ்டாலின், இந்த விவகாரங்கள் மற்றும் தமிழகத்தின் சட்டம்–ஒழுங்கு நிலை குறித்து இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து முறையிட உள்ளார்.