முதல்வர் விஜய் பிறந்தநாள் ஆலோசனை கூட்டத்தில் புகுந்து மிரட்டிய தவெக நிர்வாகிகள்!

 
தவெக தவெக

திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மையில் இணைந்த புதிய நிர்வாகிகளுக்கு, அதே கட்சியைச் சேர்ந்த பழைய நிர்வாகிகள் சிலர் கொலை மிரட்டல் விடுத்த அதிர்ச்சிச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த பாலு என்பவர் அண்மையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில், ஜூன் 22-ஆம் தேதி வரவிருக்கும் தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய்யின் பிறந்தநாளைத் திருச்சி மாவட்டத்தில் எப்படிக் கொண்டாடுவது என்பது குறித்து, பாலு மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது ஆதரவாளர்களுடன் இணைந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தவெகவின் உள்ளூர் நிர்வாகிகள் சிலர் திடீரென அங்கு வந்துள்ளனர்.

முதல்வர் விஜய்

அங்கு வந்த தவெக நிர்வாகிகள் சிலர் முழுமையாக மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் புதியதாகக் கட்சியில் இணைந்த பாலு மற்றும் அவரது குடும்பத்தினரைப் பார்த்து, தங்களைக் கேட்காமல் கட்சியில் எப்படிப் பிறந்தநாள் கூட்டங்களை நடத்தலாம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், போதையில் இருந்த தவெக நிர்வாகிகள் பாலுவின் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியதாகத் தெரிகிறது. சொந்தக் கட்சியினரே புதியதாக இணைந்தவர்களை மிரட்டிய இந்த உள்கட்சி மோதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பாலு தரப்பினர் தங்களுக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகாரளித்துள்ளனர். புகாரைப் பெற்றுக் கொண்ட கோட்டை போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.