பாலாற்றில் கலந்த தோல் தொழிற்சாலைக் கழிவுநீர் - குமுறும் விவசாயிகள்!

 
பாலாறு பாலாறு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையைப் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, சில தோல் தொழிற்சாலைகள் தங்களது ரசாயனக் கழிவுநீரை நேரடியாகப் பாலாற்றில் திறந்துவிட்டுள்ள கொடூரச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கடுமையான கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமான பாலாற்றில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

ஆற்றில் வெள்ள நீர் பெருகி ஓடுவதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட சில சுயநல தோல் தொழிற்சாலை  நிர்வாகங்கள், தங்களது ஆலைகளில் இருந்து வெளியேறும் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனக் கழிவுநீரை, விதிமுறைப்படி சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பிக் சுத்திகரிக்காமல், நேரடியாக ஆற்று வெள்ளத்தில் திறந்துவிட்டுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மழையினால் வந்த தூய நீரோடு இந்தத் தோல் ஆலைக் கழிவுகளும் கலந்ததால், பாலாற்றின் நீர் முற்றிலும் நிறம் மாறி, கடுமையான துர்நாற்றத்துடன் ஆபத்தான ரசாயன நதியாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பாலாற்று நீரை மட்டுமே நம்பி இப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வரும் சூழலில், இந்தச் செயல் விவசாயிகளின் வயிற்றில் அடித்தது போல் அமைந்துள்ளது.

"ஆற்றில் நீர் வரும்போதெல்லாம் இத்தகைய தோல் தொழிற்சாலைகள் தங்களது கழிவுகளைத் திருட்டுத்தனமாகக் கலந்துவிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இதனால் பாலாற்றைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் தங்களது வளத்தை இழந்து மலடாகி வருகின்றன. அதுமட்டுமின்றி, இந்த நச்சு நீர் பூமியில் ஊறுவதால் ஒட்டுமொத்த நிலத்தடி நீரும் மாசடைந்து, குடிநீராகக் கூடப் பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தானதாக

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயச் சங்கங்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்குத் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இயற்கையைக் காக்க வேண்டிய அதிகாரிகள், பாலாற்றில் ரசாயனக் கழிவுகளைத் திறந்துவிட்ட அந்தத் தோல் தொழிற்சாலைகளை உடனடியாகக் கண்டறிந்து, அவற்றின் உரிமங்களை ரத்து செய்வதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.