விட்டாச்சு லீவு... தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் 45 நாட்களுக்கு கோடை விடுமுறை!
தமிழகத்தில் தேர்தல் ஜுரம் ஒரு பக்கம் இருக்க, மாணவர்களுக்கு இன்றுடன் தேர்வு ஜுரம் முடிவுக்கு வருகிறது. ஏப்ரல் 23-ல் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளதால், இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கிய முழு ஆண்டுத் தேர்வுகள், இன்று மாலையுடன் ஒரு வழியாக சுபமாக முடிவடைகின்றன.

தேர்வு முடிந்த கையோடு நாளை (ஏப்ரல் 17) முதல் மாணவர்கள் 45 நாட்கள் கொண்டாட்டமான கோடை விடுமுறையில் குதிக்க உள்ளனர். ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டியிருப்பதாலும், பல பள்ளிகள் வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட உள்ளதாலும் கல்வித்துறை இந்த வேகமான முடிவை எடுத்தது. வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும், வீட்டுப்பாடம் மற்றும் அதிகாலை பள்ளிக்கு ஓடும் டென்ஷன் இல்லாத குஷியில் மாணவர்கள் இப்போதே உற்சாகமாகி விட்டனர்.

சுமார் ஒன்றரை மாத கால விடுமுறைக்குப் பிறகு, ஜூன் 1-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் இனி தேர்தல் பணிகளில் பிஸியாகிவிடுவார்கள் என்பதால், மாணவர்கள் தங்களது விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அதுவரை புத்தகப் பைகளை ஓரமாக வைத்துவிட்டு, சொந்த ஊர்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் கிளம்ப இப்போதே பல குடும்பங்கள் தயாராகிவிட்டன.
