மதுபானக் கடைக்குள் புகுந்து ரகளை செய்த சிறுத்தை - 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் மீட்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைப் பகுதியில் புகுந்த சிறுத்தை ஒன்று, அங்குள்ள மதுபானக் கடைக்குள் தஞ்சமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டம், தோடரைசிங் பகுதியில் உள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஆண் சிறுத்தை ஒன்று, நகருக்குள் புகுந்தது. ஆரம்பத்தில் புதரில் பதுங்கியிருந்த சிறுத்தையை பார்த்த பொதுமக்கள் எச்சரித்ததை அடுத்து, அப்பகுதியை ஆய்வு செய்யச் சென்ற ராகேஷ் மாலி என்ற வனத் தன்னார்வலர் மீது சிறுத்தை பாய்ந்து தாக்குதல் நடத்தியது.

தொடர்ந்து சந்தைப் பகுதி வழியாகச் சுமார் 400 மீட்டர் ஓடிய சிறுத்தை, அங்குள்ள மதுபானக் கடைக்கு வெளியே அமர்ந்திருந்த பதே லால் கோலி மற்றும் கடை ஊழியரான சஞ்சய் குர்ஜார் (25) ஆகிய இருவரையும் கடித்துக் காயப்படுத்தியது. சிறுத்தையின் தாக்குதலால் காயமடைந்த சஞ்சய் குர்ஜார் கடையை விட்டு வெளியே ஓடித் தப்பிய நிலையில், அச்சிறுத்தை நேராக மதுபானக் கடைக்குள்ளேயே புகுந்தது. உடனடியாகச் சமயோசிதமாகச் செயல்பட்ட அப்பகுதி மக்கள், கடையின் வெளிக்கதவைப் பூட்டி சிறுத்தையை உள்ளேயே சிறைபிடித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தகவலறிந்து டோங்க் வனத்துறை அதிகாரிகளும் ஜெய்ப்பூர் உயிரியல் பூங்காவைச் சேர்ந்த சிறப்பு மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் 5 மணி நேர தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு, சிறுத்தைக்குச் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் அதைப் பத்திரமாக மீட்டு டோங்க் வனப்பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்துத் தெரிவித்த மூத்த கால்நடை மருத்துவர் அசோக் தன்வார், "நான் இதுவரை 60-க்கும் மேற்பட்ட வனவிலங்கு மீட்புப் பணிகளில் பங்கேற்றுள்ளேன். ஆனால் மதுபானக் கடைக்குள்ளிருந்து சிறுத்தையை மீட்டது இதுவே முதல்முறை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
