திக் திக் நிமிடங்கள்... திருப்பதி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடுராத்திரியில் நைசாக நுழைந்த சிறுத்தை!

 
சிறுத்தை சிறுத்தை

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நள்ளிரவு அரங்கேறிய அந்தச் சம்பவம், பார்ப்பவர்களை அப்படியே உறைய வைத்துள்ளது! சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க இளம் பெண் சிறுத்தை ஒன்று, பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை கட்டடக் கதவுகள் திறந்திருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்தி, யாருக்கும் தெரியாமல் நைசாக உள்ளே புகுந்துள்ளது. விடியற்காலையில் வழக்கம் போல அறையைச் சுத்தம் செய்ய வந்த பெண் ஊழியர், உள்ளே பளபளக்கும் கண்களோடு பதுங்கியிருந்த சிறுத்தையைக் கண்டு நெஞ்சு பதறி, அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார். அந்தப் பகுதியே ஒரு நொடியில் மரண பயத்தில் மூழ்கியது

சிறுத்தை

ஊழியரின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மாணவர்களும், சமயோசிதமாகச் செயல்பட்டு இரும்பு வாளிகளைத் தரையில் தட்டி பயங்கர சத்தம் எழுப்பினர். இதனால் மிரண்டுபோன அந்தச் சிறுத்தை, தப்பிக்க வழியறியாமல் அங்கிருந்த ஒரு கழிவறைக்குள் (வாஷ்ரூம்) அம்பு வேகத்தில் புகுந்தது. இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள், சற்றும் தாமதிக்காமல் கழிவறையின் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டி, வனத்துறைக்கு அவசர அலார்ட் கொடுத்தனர். தகவல் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, ஒட்டுமொத்தப் பல்கலைக்கழக வளாகமும் திக் திக் நிமிடங்களை எண்ணத் தொடங்கியது.

சிறுத்தை ஜவாலா

விஷயம் தெரிந்ததும் ஆந்திர துணை முதலமைச்சரும் வனத்துறை அமைச்சருமான பவன் கல்யாண், "சிறுத்தைக்கோ, பொதுமக்களுக்கோ ஒரு சிறு காயம் கூட ஏற்படக் கூடாது" என அதிகாரிகளுக்கு போனில் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதன்படியே, கூண்டுகள் மற்றும் வலைகளுடன் ஸ்பாட்டுக்கு விரைந்த திருப்பதி விலங்கியல் பூங்கா மீட்புக் குழுவினர், மயக்க ஊசி எதையும் பயன்படுத்தாமலேயே, சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் சிறுத்தையைச் சாதுரியமாகக் கூண்டுக்குள் அடைத்தனர்.