"MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரட்டும்" - அமைச்சரவை விரிவாக்கத்தில் விஜய் திடீர் ட்விஸ்ட்!

 
அதிமுகவிஜய் அதிமுகவிஜய்

தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ள சூழலில், அ.தி.மு.க அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதில் முதலமைச்சர் விஜய் யாரும் எதிர்பாராத அதிரடி அரசியல் ட்விஸ்ட் ஒன்றை அடித்துள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழக அரசை ஆதரித்து நம்பிக்கைத் தீர்மானத்தில் வாக்களித்த அ.தி.மு.க-வின் எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான 25 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களில் சிலருக்கு நாளை நடைபெறவிருக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இதற்குத் த.வெ.க கூட்டணியில் உள்ள இடதுசாரிகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தன.

தளவாய் சுந்தரம் அதிமுக கொறாடா

இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள புதிய தகவல்களின்படி, நாளை நடைபெறும் அமைச்சரவை விரிவாக்கத்தில் எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பு எம்.எல்.ஏ-க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம் மற்றும் கட்சியின் கொள்கை முடிவுகளைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் விஜய் அ.தி.மு.க அதிருப்தியாளர்களுக்குக் கடுமையான நிபந்தனை ஒன்றை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, "அமைச்சரவையில் இடம் பெற விரும்பும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தங்களின் தற்போதைய பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அதன் பின்னர் முறையாகத் த.வெ.க-வில் இணைந்து, வரவிருக்கும் இடைத்தேர்தலில் கட்சியின் 'விசில்' சின்னத்தில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். மக்கள் முன்னிலையில் தங்களின் பலத்தை நிரூபித்து வெற்றி பெற்று வந்த பின்னரே அவர்களுக்கு அமைச்சரவையில் தகுந்த இடம் கொடுக்கப்படும்" என முதலமைச்சர் விஜய் கறாராகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது.

முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடி முடிவுக்குப் பின்னணியில் த.வெ.க-வின் முக்கிய அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமியின் ஆலோசனைகளும் முக்கியப் பங்கு வகித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

“இபிஎஸ் விஜயபாஸ்கர் எஸ்.பி.வேலுமணி எடப்பாடி

இது குறித்து அவர், "தமிழகத்தில் நிலவி வந்த பாரம்பரிய அரசியல் முறைகளை மாற்றுவதற்காகவே மக்கள் நமக்கு வாக்களித்துள்ளனர். குறுக்கு வழியில் மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ-க்களை இணைத்து உடனே மந்திரி பதவி கொடுத்தால் அது பழைய அரசியல் பாணியாக மாறிவிடும். எனவே, மக்கள் நம்மீது வைத்துள்ள அந்தத் தூய்மையான நம்பிக்கையை நாம் எந்தச் சூழ்நிலையிலும் பொய்யாக்கிவிடக் கூடாது" என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

முதலமைச்சரின் இந்த திடீர் ட்விஸ்ட் காரணமாக, தங்களுக்கு உடனடியாக அமைச்சர் பதவி கிடைக்கும் என நம்பியிருந்த அ.தி.மு.க அதிருப்தி முகங்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளன. அதே நேரத்தில், த.வெ.க-வின் இந்த நேர்மையான அரசியல் நகர்வு அதன் கூட்டணிக் கட்சிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.