"முதலில் விஜய் கொள்ளையடித்த பணத்தை வெளியே கொண்டு வரட்டும்!" - ஆர்.எஸ். பாரதி அட்டாக்!

 
ஆர் எஸ் பாரதி

தமிழக அரசியலில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையேயான வார்த்தைப் போர் முற்றியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்ற 'தமிழ்நாடு தலைகுனியாது' பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, நடிகர் விஜய் மீது முன்வைத்த கடுமையான விமர்சனங்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன. செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ். பாரதி, விஜய்யின் அரசியல் நகர்வுகளை ஒரு 'நாடகம்' என்று வர்ணித்துள்ளார்.

"சென்னை உயர் நீதிமன்றத்தால் ₹1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்ட மனிதர் தான் விஜய். அவர் எங்களைப் பற்றிப் பேசுவதற்கு எங்களுடைய தகுதிக்கு நாங்கள் பதில் சொல்ல அவசியமில்லை" என்று நேரடியாகத் தாக்கினார். "விஜய் முதலில் தான் கொள்ளையடித்த பணத்தை வெளியே கொண்டு வரட்டும். யார் கொள்ளையடிப்பது, யார் பணம் வாங்கி இப்படிச் செய்கிறார் என்ற நாடகம் இன்னும் சில நாட்களில் வெளிச்சத்திற்கு வரும்" எனப் பரபரப்பைக் கிளப்பினார்.

விஜய்

விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்த அவர், "இவ்வளவு பேசுபவர் ஏன் பிரதமர் மோடியைப் பற்றிப் பேசவில்லை?" என்ற கேள்வியையும் எழுப்பினார். தவெக மற்றும் மற்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் திமுகவிற்குப் பலத்தையே தரும் என்று அவர் குறிப்பிட்டார்.

"திமுக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முடியாது. அடிக்க அடிக்க பந்து உயரும், அரைக்க அரைக்கச் சந்தனம் மணக்கும். அதுபோல திமுகவைத் திட்டத் திட்ட வெற்றிகள் தான் குவியும்" என்று சவாலாகத் தெரிவித்தார். மேலும், யார் மூலம் திமுகவைத் தாக்கிப் பேசப் பார்க்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.

விஜய் தவெக ஸ்டாலின்

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட பிறகு, திமுகவின் மூத்த நிர்வாகிகள் நேரடியாக விஜய்யைக் குறிவைத்து விமர்சிப்பது அதிகரித்துள்ளது. ஆர்.எஸ். பாரதியின் இந்த "கொள்ளையடித்த பணம்" மற்றும் "நாடகம்" என்ற வார்த்தைகள் தவெக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாப் புகழைத் தாண்டி, அரசியல் களத்தில் விஜய் சந்திக்கும் இந்த நேரடித் தாக்குதல்கள், வரவிருக்கும் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.