"அடுத்த 5 வருஷத்துக்கு உதயநிதி கதறப்போறதை ரசிக்கலாம்!" - நடிகை கஸ்தூரி!

 
கஸ்தூரி கஸ்தூரி

தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், திமுகவின் தோல்வி குறித்தும், புதிய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு குறித்தும் பாஜக பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், "திமுகவினர் புதிய அரசைத் திட்டுகிறார்கள் என்றால், விஜய் ஆட்சியில் ஏதோ நல்லது செய்கிறார்கள் என்றுதான் அர்த்தம். குறிப்பாக, டாஸ்மாக் கடைகளை மூடுகிறார்கள் என்பதே மிக நல்ல விஷயம். இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் முன்னும் பின்னும் இருந்தாலும், இது புதிய ஆட்சிதானே? விஜய் அரசுக்கு அறிவுரை சொல்லப் பல மூத்த அரசியல் நிர்வாகிகள் இருக்கிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி அரசு கூடுதலான கவனம் செலுத்துவது நல்ல விஷயம்.

கஸ்தூரி

திருவொற்றியூரில் டாஸ்மாக் கடையை மூடியபோது, குடிமகன்கள் சாலையையே கடையாக மாற்றிய சம்பவங்கள் நடந்தன. எல்லா விஷயத்திற்கும் நாம் அரசாங்கத்தையே எதிர்பார்க்க முடியாது. கடந்த 5 ஆண்டுக்கால திமுக ஆட்சியில் மக்கள் அப்படிப் பழகிவிட்டார்கள். எனவே, மக்களிடமும் மாற்றம் வர வேண்டும். அதற்குச் சற்றுக் காலம் எடுக்கும். விஜய் அரசிடம் நல்ல எண்ணம் இருக்கிறது. ஆனால், அதைச் செயல்படுத்த அவர்களுக்கு நாம் கொஞ்சம் காலம் கொடுக்க வேண்டும், ஆதரவும் அளிக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் மாறலாம், ஆனால் அதிகாரிகள் மாறுவதில்லை. ஆட்சி மாறினாலும் காட்சி மாற நேரம் எடுக்கும். விஜய் அரசில் இருப்பவர்கள் எல்லோருமே புதியவர்கள் என்பதால், உடனடி கட்டமைப்பு இருக்க வாய்ப்பில்லை. புதிய அமைச்சர் கீர்த்தனா தனது எம்.எல்.ஏ வெற்றிச் சான்றிதழையே வீட்டில் வைத்துவிட்டு வந்துள்ளார். எனக்கு அவரை மூன்று மாதமாகத் தெரியும். இங்கு யாருக்கும் முன்கூட்டியே எதுவும் தெரிந்துவிடவில்லை, அதில் தப்பும் கிடையாது. அவர்களுக்கு நல்லது தெரியாது என்று திட்டலாம், ஆனால் அவர்களுக்குத் தப்பு செய்யவும் தெரியாது என்பதுதானே உண்மை!"

நடிகை கஸ்தூரி

திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் தற்போது தவெக அரசை ஆதரிப்பது குறித்துப் பேசிய கஸ்தூரி, "இது குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக உள்ளது. அவர்கள் தோற்றுவிட்டார்கள்... அதுவும் சாதாரண தோல்வி அல்ல; அதிபயங்கரமான தோல்வி! ஒரு ஓட்டு வித்தியாசத்திலும் தோற்றுவிட்டார்கள், 83 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்திலும் தோற்றுவிட்டார்கள்.

தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் உதயநிதி ஸ்டாலின் அடுத்த 5 ஆண்டுகளுக்குக் கதறுவதை நாம் கேட்டு ரசிக்கலாம். இதைப் பார்ப்பதற்காகவே நான் இப்போது விஜய்யின் மிகப்பெரிய ரசிகையாக மாறிவிட்டேன்" என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.