”சகோதரர் விஜய்யின் ரீல்ஸ் ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்” - சிறையிலிருந்து வெளியான மார்க்கண்டேயன் பேட்டி!
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜி.வி. மார்க்கண்டேயன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சிறை வாசலில் அவருக்குத் திரண்டிருந்த திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விடுதலையான பின் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்கண்டேயன், "சிறையில் அடைப்பதால் என்னை அல்லது திமுகவை ஒடுக்கிவிட முடியாது. ஆயிரம் சிறைச்சாலைகளைச் சந்திக்க திமுக தொண்டர்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். எத்தனை ஆண்டுகள் சிறையில் அடைத்தாலும் ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போராடுவோம்" என்று கூறினார்.

"எங்களுக்குச் சிறைவாசம் என்பது புதிதல்ல; வரலாற்று ரீதியாகப் பாளையங்கோட்டை சிறைச்சாலை என்பது திமுக நிர்வாகிகளுக்கு ஒரு முக்தி தரும் இடமாகவே அமைந்திருக்கிறது" எனக் குறிப்பிட்டார்.
"தற்போது மாநிலத்தில் நடக்கும் இந்த 'ரீல்ஸ்' ஆட்சியை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போராடத் தயாராக இருக்கிறோம். சட்டமன்றத்திலும் இதற்கான கடுமையான எதிர்வினைகளை திமுக நிச்சயமாகக் கொடுக்கும்" என்றார்.
"சகோதரர் விஜய்யின் ஆட்சி சர்வாதிகாரப் போக்கோடும், மக்களின் அடிப்படைப் பேச்சுரிமையைப் பறிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக நாங்கள் நிமிர்ந்து நிற்போமே தவிர ஒருபோதும் பணிய மாட்டோம்" என ஆவேசமாகத் தெரிவித்தார்.
