”பெண்ணை வாடகைக்கு எடுக்கலாம்!" - கட்டண விபரங்களுடன் வைரலாகும் இளம்பெண்ணின் சோஷியல் மீடியா போஸ்ட்!
இன்றைய நவீன டிஜிட்டல் காலகட்டத்தில் பல்வேறு விசித்திரமான சேவைகள் இணையத்தில் உலா வரும் நிலையில், பெண் ஒருவர் தன்னுடன் காபி அருந்த, சினிமா செல்ல மற்றும் உணவருந்த குறிப்பிட்ட நேரத்திற்குத் தன்னை 'வாடகைக்கு' எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறி வெளியிட்டுள்ள கட்டணப் பட்டியல் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் இல்லாத தனிமையில் வாடும் நபர்களைக் குறிவைத்து இந்த விசித்திரமான விளம்பரப் பதிவை அந்த இளம்பெண் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தன்னுடன் உணவகத்திற்கு வந்து ஒன்றாக அமர்ந்து காபி குடிக்க ரூ.1,500 கட்டணமாக நிர்ணயித்துள்ளார். இருசக்கர வாகனத்தில் ஒன்றாகப் பயணிப்பதற்கு ரூ.4,000 மற்றும் வணிக வளாகங்களுக்கு ஒன்றாகச் செல்வதற்கு ரூ.4,500 வசூலிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டிலிருந்து ஒன்றாக இணைந்து சமைப்பதற்கு ரூ.3,500 கட்டணமும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு நாட்கள் முழுமையாகத் துணையாக இருப்பதற்கு மிக அதிகபட்சமாக |ரூ.10,000 கட்டணமும் விதித்துள்ளார்.
திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு அன்றாடச் செயல்பாடுகளுக்குத் தனித்தனி விலைப் பட்டியலை அவர் வெளியிட்டுள்ள விதம், நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலைநாடுகளில் 'வாடகைக்குத் தோழன்/தோழி' என்ற கலாச்சாரம் பரவலாக இருக்கும் நிலையில், தற்போது இந்தியச் சமூக வலைத்தளப் பக்கங்களிலும் இத்தகைய பதிவுகள் வரத் தொடங்கியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எனினும், இத்தகைய விளம்பரங்கள் பாதுகாப்பற்றவை என்றும், தேவையற்ற குற்றச் சம்பவங்களுக்கு வழிவகுக்கும் என்றும் ஒரு தரப்பினர் எச்சரிக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இப்பதிவின் நம்பகத்தன்மை குறித்தோ அல்லது அந்தப் பெண் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தோ இன்னும் தெளிவான விபரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இணைய உலகில் அறிமுகமில்லாத நபர்களிடம் இத்தகைய பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது சைபர் குற்றங்களுக்கும், பண மோசடிகளுக்கும்வழிவகுக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய விளம்பரங்கள் மூலம் சட்டவிரோதச் செயல்கள் ஏதேனும் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்கப் போலீசார் மற்றும் சைபர் பிரிவு அதிகாரிகள் சமூக வலைத்தள உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்
