கச்சா எண்ணெய் மீதான தடை நீக்கம்.. அமெரிக்காவின் சலுகையை நிராகரித்தது ஈரான்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் 'ஆபரேஷன் எபிக் பியூரி' ராணுவ நடவடிக்கையினால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அமெரிக்காவின் சலுகையை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் போர் தொடங்கி நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த அமெரிக்கா எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், சர்வதேச சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டைப் போக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டது. கடலில் கப்பல்களில் தேங்கியுள்ள ஈரானின் 14 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய 30 நாட்களுக்கு மட்டும் தற்காலிக அனுமதி அளித்தது. இதன் மூலம் சந்தைக்குக் கூடுதல் எண்ணெய் வந்து விலையைக் குறைக்கும். அதே சமயம், ஈரான் இதிலிருந்து கிடைக்கும் பணத்தை நேரடியாகப் பயன்படுத்த முடியாதபடி நிதித் தடைகளைத் தொடர அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. "ஈரானின் எண்ணெயை ஈரானுக்கு எதிராகவே பயன்படுத்தி விலையைக் குறைப்போம்" என அமெரிக்க கருவூலச் செயலாளர் பெசென்ட் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பை ஈரான் முற்றிலுமாக மறுத்துள்ளது. இது குறித்து மும்பையில் உள்ள ஈரான் தூதரகம் மற்றும் ஈரான் எண்ணெய் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது சர்வதேசச் சந்தைக்கு வழங்குவதற்கு எங்களிடம் உபரியாகவோ அல்லது கப்பல்களில் தேங்கிய நிலையிலோ கச்சா எண்ணெய் ஏதுமில்லை" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பு என்றும், எண்ணெய் வாங்குபவர்களைச் சமாதானப்படுத்த அமெரிக்கா நடத்தும் நாடகம் என்றும் ஈரான் சாடியுள்ளது. ஈரானின் இந்த மறுப்பால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடக்கும் எண்ணெய் போக்குவரத்து ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரானின் இந்த பிடிவாதம் உலக நாடுகளைக் கவலையடையச் செய்துள்ளது.
