திருப்பதியைப் போல் தமிழகக் கோயில்களிலும் ஆன்லைன் தரிசன டிக்கெட் - முதற்கட்டமாக 50 கோயில்களில் அமல்படுத்த அமைச்சர் ரமேஷ் முடிவு!
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலைப் போன்றே, தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற முதன்மைத் திருக்கோயில்களிலும் ஆன்லைன் மூலமாக மட்டுமே தரிசன டிக்கெட்டுகளைப் பெறும் புதிய டிஜிட்டல் திட்டத்தை தவெக அரசு கொண்டு வரவுள்ளது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ரமேஷ், துறை ரீதியான பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, முக்கியக் கோயில்களில் நிலவும் கட்டணத் தரிசனக் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த இப்புதிய உத்தி வகுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் முதற்கட்டமாகச் சென்னைக்கு அருகில் உள்ள பிரசித்தி பெற்ற மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் மிக விரைவில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மாங்காடு கோயிலில் கிடைக்கும் ஆன்லைன் வரவேற்பு மற்றும் தொழில்நுட்பச் செயல்பாடுகளை ஆராய்ந்த பிறகு, அடுத்தகட்டமாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், திருத்தணி முருகன் கோயில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் 50 முதன்மையான பெரிய கோயில்களில் இத்திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
இப்புதிய ஆன்லைன் தரிசன முறை அமலாக்கம் குறித்து, சென்னை உத்தமர் காந்தி சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தில் அமைச்சர் ரமேஷ் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்:
இக்கூட்டத்தின் போது, புதிய இணையதளப் பக்கத்தில் பக்தர்கள் எவ்வாறு தங்களது விவரங்களைப் பதிவு செய்து தரிசன டிக்கெட்டுகளைப் பெற வேண்டும் என்பது குறித்தும், அதற்கான நேரக் கட்டுப்பாடு முறைகள் குறித்தும், அறநிலையத் துறை ஆணையர் விரிவான புள்ளிவிவரங்களுடன் கூடிய கணினி சார்ந்த காணொளிக் காட்சியை திரையிட்டுக் காண்பித்து அமைச்சருக்கு விளக்கமளித்தார்.
