பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு; 23 பேரை ‘பயங்கரவாதிகளாக’ அறிவித்தது இந்திய உள்துறை அமைச்சகம்!

 
மத்திய அமைச்சகம்

இந்தியாவில் பயங்கரவாத வலைப்பின்னல்களை வேரோடு ஒடுக்கவும், தேசத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடைய 23 நபர்களை, இந்திய உள்துறை அமைச்சகம்  பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தய்பா உள்ளிட்ட பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு, இந்தியாவிற்கு எதிராகச் சதித் திட்டங்களைத் தீட்டிய குற்றத்திற்காக இந்த 23 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகக் கடுமையான சட்டமாகக் கருதப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்த 23 நபர்களும் தனிநபர் பயங்கரவாதிகளாக முறைப்படி அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய எல்லைக்குள் ஊடுருவல் மற்றும் தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில், "இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்தவொரு சக்தியையும் இந்திய அரசு சகித்துக் கொள்ளாது. எல்லாவற்றையும் தாண்டி இந்த பயங்கரவாத வலைப்பின்னல்களை முற்றிலும் ஒடுக்கவும், தேசிய பாதுகாப்பை மிக வலுவாகப் பேணிக் காக்கவும் இந்தத் தனிநபர் பயங்கரவாதிகள் அறிவிப்புப் பட்டியல் மிகப்பெரிய சட்ட ரீதியான முட்டுக்கட்டையாக அமையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட நபர்களின் சொத்துகளை முடக்குவதற்கும், சர்வதேச அளவில் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கும் இந்தியப் பாதுகாப்பு முகமைகளுக்குக் கூடுதல் சட்ட அதிகாரங்கள் கிடைத்துள்ளன.