“மாணவிகளிடம் பேசினாலே போக்சோவில் கைது” - உளறிக் கொட்டிய 'சிங்கப்பெண்' காவல் அதிகாரி நீக்கம்!

 
சிங்கப்பெண்

அரியலூரில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது, "சக மாணவிகளிடம் பேசினாலே போக்சோ சட்டத்தில் சிறைக்குச் செல்ல நேரிடும்" என தவறாகப் பேசிய பெண் உதவி ஆய்வாளர் சுமதி 'சிங்கப்பெண்' திட்டப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அரியலூர் அரசுப் பள்ளியில் 'சிங்கப்பெண்' திட்டம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண் உதவி ஆய்வாளர் சுமதி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "சக மாணவிகளிடம் பேசினாலே போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறைக்குச் செல்ல நேரிடும்" என்று பேசினார்.

இக்கருத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலானது. சட்டத்தைப் பாதுகாக்கும் காவல்துறையினருக்கே போக்சோ சட்டம் பற்றிய சரியான புரிதல் இல்லையா எனப் பலதரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. போக்சோ சட்டம் குறித்து தவறான புரிதலை மாணவர்களிடையே விதைக்கும் வகையில் பேசியதைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் சுமதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவர் 'சிங்கப்பெண்' விழிப்புணர்வுப் படைப் பொறுப்பிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டார். மீண்டும் அவர் தனது வழக்கமான காவல் நிலையப் பணிக்குத் திரும்ப மாற்றப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளார்.