தவெக பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. 2 பேர் கைது.. போலீசார் விசாரணை!
சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மர்ம நபர்கள் மதுபாட்டில்களை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் பெண் தொண்டர் ஒருவர் காயமடைந்ததைத் தொடர்ந்து, தவெகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை வில்லிவாக்கம் மற்றும் அயனாவரம் பகுதிகளில் தவெகழகத்தின் பொதுக்கூட்டம் நேற்று (மார்ச் 31) மாலை நடைபெற்றது. கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பிரிவுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மர்ம நபர்கள் மதுபாட்டில்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அயனாவரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஆதவ் அர்ஜுனா உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது கூட்ட அரங்குக்கு அருகில் இருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்திலிருந்து, மர்ம நபர்கள் கூட்டத்தை நோக்கி காலி மதுபாட்டில்களை வீசினர். இதில் ஒரு மதுபாட்டில் கூட்டத்தில் இருந்த பெண் தொண்டர் ஒருவரின் தலையில் பட்டு உடைந்தது. இதில் அவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
தாக்குதல் நடந்ததைக் கண்ட தவெக தொண்டர்கள் கடும் ஆத்திரமடைந்தனர். "காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்கவில்லை" எனக் கூறி, அயனாவரம் சாலை சந்திப்பில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முடங்கியது. மேடையில் இருந்த ஆதவ் அர்ஜுனா, தொண்டர்களை அமைதிப்படுத்த முயன்றார். "இது போன்ற அச்சுறுத்தல்களுக்குத் தவெக அஞ்சாது" என அவர் மேடையில் ஆக்ரோஷமாகப் பேசினார்.

இந்தச் சம்பவம் குறித்து வில்லிவாக்கம் மற்றும் அயனாவரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மதுபாட்டில் வீசப்பட்டதாகக் கூறப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் போதையில் இருந்தார்களா அல்லது திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையில் தவெக நடத்தும் பொதுக்கூட்டங்களுக்குக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
