மது பிரியர்கள் அதிர்ச்சி... குவார்ட்டர் பாட்டில் விலை ரூ.150 ஆக உயர்கிறது... தமிழ்நாட்டில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் கட்டாயமாகிறது!

 
பாட்டில்

தமிழ்நாட்டில் மதுபாட்டில்களைப் பயன்படுத்திவிட்டுச் சாலைகள் மற்றும் பொதுஇடங்களில் வீசி எறிவதால் சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறையைத் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) கட்டாயமாக்க முடிவெடுத்துள்ளது.

காலி பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்காக எம்.ஆர்.பி. விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வந்தது. இனி குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில், இந்த ரூ.10 வைப்புத்தொகையும் பாட்டிலின் அச்சிடப்பட்ட சில்லறை விலையிலேயே சேர்க்கப்பட உள்ளது.

டாஸ்மாக் மதுபாட்டில் பாட்டில்

இந்த புதிய மாற்றத்தின்படி, இதுவரை ரூ.140-க்கு விற்பனையான குவார்டர் பாட்டில் மது, இனி ரூ.150 என அச்சிடப்பட்டு விற்கப்படும். மதுப் பிரியர்கள் அந்த அச்சிடப்பட்ட விலையைக் கொடுத்து பாட்டில வாங்கியாக வேண்டும்.

மது அருந்திய பிறகு காலி பாட்டிலைத் திரும்ப டாஸ்மாக் கடைகளில் ஒப்படைக்கும் பட்சத்தில், முன்பணமாகச் செலுத்திய அந்த ரூ.10 வாடிக்கையாளரிடம் உடனடியாகத் திரும்ப வழங்கப்படும்.

டாஸ்மாக் காலி பாட்டில்

காலி பாட்டில்களை மறுசுழற்சி செய்வதில் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காண பாட்டிலுக்கு ரூ.20-க்கு மிகாமல் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை வரி விதிக்க மதிப்பு கூட்டு வரி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு ஆளுநரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இடைத்தேர்தல்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த நடைமுறை அடுத்த சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் கூடுதலாகப் பணம் வசூலிப்பது மற்றும் காலி பாட்டில்களைத் தந்தால் பணம் தர மறுப்பது போன்ற புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அச்சிடப்பட்ட விலை உயர்வு மற்றும் கட்டாயத் திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.