லிவ்-இன் விபரீதம்: 8 மாத கர்ப்பிணி காதலியைக் கொன்று புதைத்த காதலன்!
ஜெய்ப்பூரில், தன்னுனுடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்த 8 மாத கர்ப்பிணிப் பெண்ணைக் காதலனே கழுத்தை நெரித்துக் கொன்று புதைத்த கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூரின் பிண்டாயகா பகுதியில் 22 வயதான பிரவேஷ் ராவத் என்பவரும், 32 வயதான கிரண் என்பவரும் கடந்த ஜனவரி மாதம் முதல் லிவ்-இன் முறையில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். வேலைக்குச் செல்லும் போது பிரவேஷ் தனது செல்போனை கிரணிடம் கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கம். அப்போது கிரண் வேறு யாரிடமோ தொலைபேசியில் பேசுவதாக ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 23 அன்று காலையில் கிரணைக் கழுத்தை நெரித்துக் கொன்ற பிரவேஷ், வீட்டின் புல்வெளியில் குழி தோண்டி உடலைப் புதைத்துள்ளார். மேலும், துர்நாற்றம் வராமலும் சந்தேகத்தைத் தவிர்க்கவும் உடலின் மீது சுமார் 2 கிலோ உப்பைத் தூவியுள்ளார்.

கொலையைச் செய்துவிட்டுச் செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வழக்கம்போலத் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்ற அவர், செப்டம்பர் 27 அன்று ஒப்பந்தக்காரரிடம் ரூ.500 கடன் வாங்கிக் கொண்டு உத்தரப்பிரதேசத்திற்குத் தப்பியோடியுள்ளார். தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.
