கால்நடைத் திருவிழா... 2 அடி உயரமே கொண்ட ‘பிங்கி’ எருமைக்கு ரூ.1 கோடி விலை!

 
புஷ்கர் பிங்கி எருமை

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற புஷ்கர் கால்நடைத் திருவிழாவில், வெறும் 2 அடி உயரமே கொண்ட ‘பிங்கி’ என்ற அரிய வகை குட்டை எருமை பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து வருகிறது. தனித்துவமான உருவமைப்பைக் கொண்ட இந்த எருமைக்கு அதன் உரிமையாளர் ரூ.1 கோடி விலை நிர்ணயித்திருப்பது திருவிழாவிற்கு வருபவர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமான எருமைகளைப் போல் அல்லாமல், சுமார் 2 அடி உயரம் மட்டுமே கொண்ட மிகச் சிறிய உருவத்துடன் காணப்படும் ‘பிங்கி’, புஷ்கர் மைதானத்தின் முக்கிய ஈர்ப்பாக மாறியுள்ளது. அரிய வகை மரபணு மற்றும் தனித்துவமான குட்டை உருவம் காரணமாக, இந்த எருமைக்கு அதன் உரிமையாளர் ரூ.1 கோடி விலை நிர்ணயித்துள்ளார்.

மிகவும் அமைதியான குணமும், மக்களுடன் எளிதில் பழகும் தன்மையும் கொண்ட ‘பிங்கி’யை நேரில் பார்ப்பதற்காகவும், அதனுடன் நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காகவும் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.