விடுதி உணவில் விழுந்த பல்லி... கொதித்தெழுந்த மாணவர்கள்... வைரல் வீடியோ!
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்வி நிறுவன விடுதியில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதி உணவகத்தில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு மாணவரின் தட்டில் இருந்த உணவில் செத்த நிலையில் பல்லி ஒன்று கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியில் உறைந்தார். உடனடியாக இது குறித்து அங்கிருந்த உணவக ஊழியரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர். ஆனால், அந்த ஊழியர் அளித்த பதிலோ மாணவர்களை இன்னும் ஆத்திரமடையச் செய்தது.
உணவில் கிடந்த பல்லியைப் பார்த்த அந்த ஊழியர், "இது பல்லி கிடையாது, உணவில் போடப்பட்ட குடைமிளகாய் தான்" என மிகவும் சாதாரணமாகக் கூறி மழுப்ப முயன்றார். ஊழியரின் இந்த அப்பட்டமான பொய்ப் பேச்சு மற்றும் பொறுப்பற்ற செயலால் ஆத்திரமடைந்த மாணவர்கள், தட்டில் கிடந்த பல்லியை வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். "பல்லிக்கும் குடைமிளகாய்க்கும் வித்தியாசம் தெரியாதவர்களா சமையல் செய்கிறார்கள்?" எனக் கேள்வி எழுப்பிய மாணவர்கள், விடுதி நிர்வாகத்தைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருவதைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விடுதியில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கல்வி நிறுவனங்களில் தங்கிப் பயிலும் மாணவர்களின் உடல்நலத்துடன் விளையாடும் இதுபோன்ற விடுதி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். "குறைந்தபட்சம் செய்த தவறை ஒப்புக்கொள்ளாமல், இப்படிப் பச்சைப்பொய் சொல்லும் ஊழியர்கள் இருக்கும் இடத்தில் எப்படி நிம்மதியாக உணவருந்த முடியும்?" என மாணவர்கள் குமுறுகின்றனர்
