பரபரப்பு... பல்லி விழுந்த உணவை உண்ட 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழக்கம்போல உணவு வழங்கப்பட்டது. தயாரிக்கப்பட்ட உணவில் எதிர்பாராதவிதமாக நச்சுத்தன்மை கொண்ட பல்லி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அந்த உணவை உட்கொண்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்குச் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டது. உணவு அருந்திய பலருக்கும் திடீரென கடுமையான வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் உடனடியாக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவசர மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவர்கள் குழுவினர் பாதிக்கப்பட்ட பணியாளர்களின் உடல்நிலையைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் அங்கே பதற்றமான சூழல் நிலவியது.இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வுகளைத் தொடங்கினர். பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கூடப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அலட்சியமாகச் சமையல் செய்த பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் சுகாதாரத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
