அரசு உதவி பெறும் பள்ளி காலை உணவில் பல்லி - 17 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

 
உணவில் பல்லி

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்குக் காலை உணவாகப் பொங்கல் வழங்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் மாணவர்கள் உணவை உட்கொண்ட போது, சமைக்கப்பட்ட பொங்கலில் பல்லி ஒன்று செத்துக் கிடந்தது தெரியவந்தது.

பல்லி கிடந்த உணவைச் சாப்பிட்ட 17 மாணவர்களுக்கு அடுத்தடுத்து திடீரென கடுமையான வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட 17 மாணவர்களையும் உடனடியாக மீட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு பூந்தமல்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த சுகாதாரத் துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், பள்ளிச் சமையலறை மற்றும் உணவின் தரத்தை ஆய்வு செய்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.