“தெருவோர கடைகளில் சுகாதாரமான உணவு தயாரிக்க கடன்”.. அமைச்சர் அருண்ராஜ் தகவல்!

 
அமைச்சர் அருண்ராஜ்

தமிழ்நாட்டில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய நகரங்களில் உள்ள தெருவோர உணவுக் கடைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களுக்குப் பாதுகாப்பான உணவுகள் கிடைப்பதை உறுதி செய்யவும் புதிய கடனுதவித் திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சுகாதாரமான மற்றும் தரமான உணவு தயாரிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், முதற்கட்டமாகச் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய 5 முக்கிய மாவட்டங்களில் உள்ள தெருவோர உணவுக் கடைகளுக்கு இந்த நிதியுதவி மற்றும் கடனுதவிகள் வழங்கப்படுவதாகத் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

மக்களுக்குக் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கும் தெருவோர உணவுகளின் தூய்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அரசு திட்டமிட்டுள்ளது. தெருவோர வியாபாரிகள் தங்களின் கடைகளில் தூய்மையான குடிநீர் வசதி, தரமான சமையல் பாத்திரங்கள், கழிவுநீர் மேலாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்குக் குறைந்த வட்டியில் இந்தக் கடனுதவி கை கொடுக்கும்.

மாவட்டம்தோறும் குறிப்பிட்ட பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அங்குப் பாதுகாப்பான மற்றும் தரமான உணவு மட்டுமே கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் "சுகாதாரமான உணவு வீதிகளை" உருவாக்க அரசு திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் சுகாதாரமான முறையில் உணவகங்களை மாற்றியமைக்க விரும்பும் சிறு மற்றும் குறு வியாபாரிகளுக்கு இந்தத் திட்டம் பெரும் ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.