தமிழகத்தின் 6 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை - மார்ச் 2 முதல் 4ம் தேதி வரை கொண்டாட்டம்!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மார்ச் மாதத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள முக்கிய ஆன்மிகத் திருவிழாக்களை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளன.
தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் நடைபெறும் திருவிழாக்களுக்காக, வரும் வாரத்தில் தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மார்ச் 2ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், மார்ச் 14ம் தேதி (சனிக்கிழமை) அன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் இயங்கும்.

அதே போன்று மார்ச் 3ம் தேதி செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி ஓசூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி ஆகிய 4 வட்டங்களுக்கு மட்டும் மார்ச் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்று நடைபெறும் பொதுத் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும்; தேர்வெழுதும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 14ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 4ம் தேதி புதன்கிழமை தென்தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமியின் 194-வது அவதாரத் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஈடு செய்ய மார்ச் 7ம் தேதி, சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று தென்காசி: மாவட்டம் முழுவதும் மார்ச் 4ல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஈடு செய்ய மார்ச் 7ம் தேதி, சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மார்ச் 4ல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஈடு செய்ய மார்ச் 14ம் தேதி, சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகள் அல்லது செய்முறைத் தேர்வுகள் நடைபெற வாய்ப்புள்ளதால், தேர்வு அட்டவணையில் உள்ள மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழக்கம் போலத் தேர்வுகளில் பங்கேற்க வேண்டும்.
இந்த விடுமுறை நாட்கள் அனைத்தும் 'உள்ளூர் விடுமுறை' என்பதால், வங்கிகள் மற்றும் அரசு கருவூலங்கள் அவசரத் தேவைகளுக்காகக் குறைந்தபட்சப் பணியாளர்களுடன் செயல்படும். 'நெகோஷியபிள் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் ஆக்ட்' கீழ் இது பொது விடுமுறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திருவிழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், அந்தந்த மாவட்டக் காவல்துறை சார்பில் கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. குறிப்பாக ஓசூர் மற்றும் சுவாமித்தோப்பு பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
