மீண்டும் லாக்-டவுனா? வங்கிகளுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு!
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதாரத் தட்டுப்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பொதுத்துறை வங்கிகள் மற்றும் அரசு நிதி நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அதிரடியான சில சிக்கனக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதிச் சேவைகள் துறை, பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் எல்ஐசி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிதி அமைப்புகளுக்கும் இந்த புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த சிக்கன நடவடிக்கைகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் தலைவர்கள், மேலாண்மை இயக்குநர்கள்மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் மேற்கொள்ளும் தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவசியமான வெளிநாட்டுப் பயணங்களை மட்டுமே அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
வங்கிகளின் அனைத்து விதமான ஆய்வுக் கூட்டங்கள், ஆலோசனைகள் மற்றும் விளக்கக்காட்சிகள் அனைத்தையும் முடிந்தவரை நேரில் நடத்தாமல், ஆன்லைன் மூலமாக 'வீடியோ கான்பரன்ஸ்' வழியிலேயே நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எரிபொருள் நுகர்வைக் குறைத்து, மாற்று ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில் மற்றொரு முக்கிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளின் தலைமை அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்களில் வாடகைக்குப் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் கார்களுக்குப் பதிலாக, சுற்றுச்சூழல் பாராமரிப்பைக் கருத்தில் கொண்டு மின்சார வாகனங்களை வாடகைக்கு எடுக்க வேண்டும். தற்போது பயன்பாட்டில் உள்ள எரிபொருள் வாகனங்களையும் படிப்படியாக இ-வாகனங்களாக மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய உத்தரவில் கூட்டங்களை ஆன்லைனில் நடத்தக் கூறப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மத்தியில் மீண்டும் 'லாக்டவுன்' போன்ற கட்டுப்பாடுகள் வருமோ என்ற தேவையற்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனால், இந்த உத்தரவு பொதுமக்களுக்கானது அல்ல. உலகளாவிய எரிபொருள் நெருக்கடியில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், தேவையற்ற அரசுச் செலவுகளைக் குறைக்கவும், அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும் மட்டுமே பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த உள்வட்டார அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
