சொத்து தகராறில் வக்கீல் பேரன் சுட்டுக்கொலை! 83 வயது தாத்தா கைது - லோனாவலாவில் அதிர்ச்சி
மகாராஷ்டிரா மாநிலம் லோனாவலாவில் சொத்து தகராறு காரணமாக 33 வயது வக்கீல் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது 83 வயது தாத்தா உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆரம்பத்தில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததாக கூறப்பட்ட நிலையில், போலீஸ் விசாரணையில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால் இந்த சம்பவம் கொலை வழக்காக மாறியுள்ளது.
லோனாவலா புஷி பகுதியில் உள்ள மோதிராம் ஓட்டலில் கடந்த அக்டோபர் 5-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் அபய் மாணிக் மராத்தே. வக்கீலான இவர், தனது தாத்தா மோதிராம் மராத்தேவுக்கு சொந்தமான உரிமம் பெற்ற 12-போர் துப்பாக்கியால் மார்பில் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த அபய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து போலீசாரிடம் குடும்பத்தினர் அளித்த ஆரம்ப தகவலில், துப்பாக்கியை சுத்தம் செய்தபோது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்து அபய் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் முதலில் விபத்து மரணம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.
ஆனால் அபயின் உடலில் இருந்த துப்பாக்கிக் காயத்தின் தன்மை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் ஓட்டல் பகுதியில் சுவரில் ரத்தக்கறைகள் மற்றும் ரத்தத் துளிகள் காணப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தப்பட்டதுடன், ஓட்டல் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் அபய்க்கும் அவரது தாத்தாவுக்கும் சொத்து விற்பனை தொடர்பாக தகராறு இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சொத்தை விற்பது தொடர்பான விவகாரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது தாத்தா துப்பாக்கியால் சுட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி மற்றும் துப்பாக்கிச்சூடு நடந்த விதம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும், சம்பவத்திற்குப் பிறகு உண்மையை மறைக்க முயற்சி நடந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் DVR அகற்றப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பான ஆதாரங்களை மறைக்க முயன்றதாக சில குடும்ப உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தாத்தா மோதிராம் மராத்தே உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
