அமெரிக்கா-சீனா போர் உலகை அழிக்கும் - தைவான் விவகாரத்தில் லண்டன் எச்சரிக்கை!

 
அமெரிக்கா - சீனா அமெரிக்கா - சீனா

தைவான் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு பெரும் வல்லரசு நாடுகளுக்கு இடையே தப்பித்தவறி போர் மூண்டால், அது உலகையே அழிவுக்குக் கொண்டு செல்லும் அணுஆயுதப் போராக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக லண்டனைச் சேர்ந்த முன்னணி பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

சிங்கப்பூரில் இன்று தொடங்கவுள்ள ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு மாநாட்டிற்கு முன்னதாக வெளியாகியுள்ள இந்த அறிக்கை, உலக நாடுகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புகழ்பெற்ற 'சர்வதேச உத்திசார் ஆய்வு நிறுவனம்' புதிய உத்திசார் மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  உலகம் தற்போது ஒரு புதிய அணுஆயுதப் போட்டியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்த விநாசகரமான போட்டியின் மையப்புள்ளியாக 'ஆசிய-பசிபிக் பிராந்தியம்' மாறியுள்ளது.

அமெரிக்கா சீனா

இந்தப் பிராந்தியத்தில் உள்ள வல்லரசு நாடுகளும், அவற்றின் நட்பு நாடுகளும் தங்களது அணுஆயுத இருப்பை அதிவேகமாகவும், ரகசியமாகவும் அதிகரித்து வருகின்றன. அதேநேரம், அணுஆயுதங்கள் இல்லாத பிற நாடுகள் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைத் திறன்களை வளர்த்துக் கொள்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தைவான் தீவைத் தனது நாட்டின் ஒரு பகுதி என்று உரிமை கொண்டாடி வரும் சீனா, தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தியும் அதனை இணைப்போம் என்று கூறி வருகிறது. இந்நிலையில், தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால், அதன் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் தகவல் தொடர்புத் தளங்களை அமெரிக்க ராணுவம் குறிவைக்கும். அதேபோல் அமெரிக்கத் தளங்களைச் சீனா தாக்கும். இரு நாடுகளும் தங்களது உச்சகட்ட ராணுவ பலத்தைப் பயன்படுத்தும்போது, இந்தப் போர் மிக எளிதாக அணுஆயுதப் போராக மாறக்கூடும் என்று 156 பக்கங்கள் கொண்ட இந்த பாதுகாப்பு அறிக்கை எச்சரிக்கிறது.

சிங்கப்பூரில் இன்று தொடங்கி மே 31 வரை நடைபெறவுள்ள 23-ஆவது 'ஷாங்ரி-லா கலந்துரையாடல்' என்ற சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கப் பாதுகாப்புத்துறைச் செயலாளர் பீட் ஹெக்செத்  உள்ளிட்ட 44 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், ராணுவத் தளபதிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

சீனா அமெரிக்கா

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ள அணுஆயுதங்களின் எண்ணிக்கையை விடச் சீனாவின் இருப்பு தற்பொழுது குறைவாக இருந்தாலும், சீனா மிக வேகமாகத் தனது அணுஆயுதத் தயாரிப்பை அதிகரித்து வருகிறது (2030-க்குள் 1,000 அணு ஆயுதங்கள்). மேலும், எதிர்பாராத ஒரு போர்ச் சூழல் ஏற்பட்டால் அதனை எப்படிக் கட்டுப்படுத்துவது அல்லது இரு தரப்பும் அணுஆயுதப் பயன்பாட்டைத் தவிர்ப்பது எப்படி என்பதற்கான எந்தவொரு பரஸ்பர 'பாதுகாப்பு விதிகளும்' தற்போதைக்கு அமெரிக்கா மற்றும் சீனா இடையே இல்லை என்பதுதான் இந்த அறிக்கையின் மிக முக்கியமான எச்சரிக்கையாகும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும் இடையே அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற உயர்மட்டச் சந்திப்பிற்குப் பிறகும் தைவான் எல்லைப் பகுதியில் சீனா தனது ராணுவ நடமாட்டத்தை அதிகரித்துள்ள நிலையில், லண்டன் நிறுவனத்தின் இந்த அறிக்கை சர்வதேசப் புவிசார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.