அமெரிக்கா சென்ற லண்டன் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... சித்திரவதை செய்யப் பணம் கொடுத்து உயிரைவிட்ட அதிர்ச்சிச் சம்பவம்!
இங்கிலாந்தைச் சேர்ந்த இசை ஆசிரியை ஒருவர், மன உளைச்சல் காரணமாகத் தன்னைச் சித்திரவதை செய்து கொலை செய்ய அமெரிக்க நபருக்குப் பணம் கொடுத்துப் பலியான திடுக்கிடும் தகவல் நீதிமன்ற விசாரணையில் வெளிவந்துள்ளது.
லண்டனின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த சோனியா எக்செல்பி (32) என்ற இசை ஆசிரியை, கடுமையான மன உளைச்சல் காரணமாக இணையதளம் வழியே அமெரிக்காவைச் சேர்ந்த டுவைன் ஹால் (53) என்பவருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். தன்னைச் சித்திரவதை செய்துக் கொலை செய்வதற்காக, சோனியா அந்த நபருக்கு 4,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 லட்சம்) வழங்க ஒப்புக் கொண்டு, கடந்த ஆண்டு அக்டோபரில் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்குச் சென்றுள்ளார்.

அமெரிக்க விடுதியில் அந்நபரின் கட்டுப்பாட்டில் சிக்கிய பிறகு, சோனியா தனது முடிவுக் குறித்து அஞ்சித் தப்பிக்க முயன்றுள்ளார். "அவன் என்னை விடுவிக்க மறுக்கிறான், பெரிய தவறு செய்துவிட்டேன்" என்று தனது தோழிக்கு ரகசியமாகக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதற்குள் காலம் கடந்துவிட்டது. சோனியா நாடு திரும்பாததால் குடும்பத்தினர் அளித்த புகாரில் விசாரணை நடத்திய அமெரிக்கப் போலீசார், புளோரிடாவின் மேரியன் கவுண்டி காட்டுப்பகுதியில் 4 முறை கத்தியால் குத்தப்பட்டு ஆழமற்ற குழியில் புதைக்கப்பட்டிருந்த சோனியாவின் சடலத்தைக் கண்டெடுத்தனர்.
சோனியாவின் வங்கி அட்டைகளைப் பயன்படுத்திப் பணம் எடுக்க முயன்ற 53 வயதான கொலையாளி டுவைனை அமெரிக்கப் போலீசார் கைது செய்தனர். அவர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
