லண்டனில் ரூபாய் 1 கோடி சம்பளம் முதல் துப்புரவு பணி வரை... இந்தியப் பெண்ணின் வைரல் வீடியோ!
லண்டனில் ஆண்டுக்கு 100,000 பவுண்டுகள் அதாவது சுமார் 1 கோடி ரூபாய் சம்பளத்தில் உயர் பதவியில் இருந்தவர் ஸ்வேதா. பிராண்டட் உடைகள் மற்றும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்து வந்த இவர், 2023-ல் தனது கணவரின் பணிக்காக ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தார். ஆனால் அங்கு அவருக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்காததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் தனது கௌரவத்தை பார்க்காமல் வீடுகளை சுத்தம் செய்யும் சாதாரண வேலையில் சேர்ந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
கோடி கோடியாக சம்பாதித்த கைகள் இன்று வீடுகளை சுத்தம் செய்கிறதே என்று வருத்தம் இருந்தாலும், அந்த உழைப்பு அவருக்கு ஒரு புதிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது. பணம் என்பது ஒரு பெண்ணுக்கான சுதந்திரம் என்றும், செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அதுவே ஒருவருக்கான உண்மையான அடையாளம் என்றும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். கடினமான சூழலில் துவண்டு விடாமல் தனது ஈகோவை தூக்கி எறிந்துவிட்டு உழைக்க முன்வந்த ஸ்வேதாவின் இந்த மனதிடம் பலருக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.
தற்போது வீடுகளை சுத்தம் செய்யும் பணியுடன் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது மற்றும் சொந்தமாக தொழில் தொடங்குவது என அவர் பம்பரமாய் சுழன்று வருகிறார். முயற்சித்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ஸ்வேதாவின் இந்த போராட்டமான வாழ்க்கைப் பயணம் ஒரு சிறந்த சான்றாகும். இவரது கதையை இணையவாசிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பாராட்டுகளை குவித்து வருவதால், ஸ்வேதாவின் துணிச்சலான முடிவு தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் வைரலாகி வருகிறது.
