சொந்த ஊருக்குச் செல்ல முடியாத ஏக்கம்… தூத்துக்குடியில் வடமாநில தொழிலாளி தற்கொலை
தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறால் ஏற்பட்ட மன உளைச்சலில் வடமாநிலத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்ராம் (55), கடந்த 4 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டம் வடக்கு காரசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது இரண்டாவது மகன் உட்டம்குமாரும் (25) அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

சுரேஷ்ராம் 6 மாதங்கள் இங்கு வேலை பார்த்துவிட்டு, 6 மாதங்கள் சொந்த ஊருக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், பீகாரில் வசிக்கும் அவரது கடைசி மகனுக்குத் திருமணமாகி 2 மாதங்களான நிலையில், அவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ்ராம், சொந்த ஊருக்குச் செல்ல விரும்பியும் செல்ல முடியாத சூழலில் தவித்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் தங்கியிருந்த இடத்தின் அருகே தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து உட்டம்குமார் அளித்த புகாரின்பேரில் முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
